சுடச்சுட

  

  திருப்பரங்குன்றம் அருகே தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை

  By DIN  |   Published on : 02nd July 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தந்தை, மகள் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டனர்.  
  தோப்பூர் மேம்பாலம் அருகே முள்புதர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணும், 9 வயது சிறுமியும் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஆஸ்டின்பட்டி போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
  இறந்தவரின் பையில் இருந்த ஓட்டுநர் உரிமம், கடிதம் ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார்  நடத்திய விசாரணையில், இறந்துகிடந்தது மேட்டுப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த வில்லியம்ஸ் மகன் கிங்ஸ்டன் கிருபாகரன் (41),  சிறுமி அவரது மகள் ஜூலியா ஸ்வீட்டி (9)  என்பதும் தெரிய வந்தது.
  மருந்துப் பொருள்கள் விற்பனை செய்து வந்த கிங்ஸ்டன் கிருபாகரன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றுள்ளார். இவர்களது மகள் ஜூலியா ஸ்வீட்டி. மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். 
  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டுப்பாளையம் தேவாலயத்தில் இருந்து தனது மகளுடன் புறப்பட்டு, மதுரை வந்து, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தில் தோப்பூர் வந்துள்ளார்.  
  பின்னர் அங்குள்ள புதர் பகுதிக்குச் சென்று  மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
  மேலும், அவரது பையில் இருந்த கடிதத்தில், "நான் பல போராட்டங்களை சந்தித்து விட்டேன். இனியும் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னுடன் பாப்பாவும் வருகிறேன் என்றதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுக்கிறேன்  என தம்பி மற்றும் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து, கிருபாகரனின் தாயார் மரியம் ரத்னாவதி வந்து இருவரின் சடலங்களையும் அடையாளம் காட்டினார். 
  இதுகுறித்து  மரியம் ரத்னாவதி கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai