உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பாக குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை

உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
உசிலம்பட்டி அருகேயுள்ள ஆரியபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(42). இவரது குழந்தைகள்  தீகோ(13), திவாணி(10), திலோசுந்தர்(7). குழந்தைகள் மூன்று பேரும் உசிலம்பட்டி- கவணம்பட்டி சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பள்ளி முதல்வர் மறுப்பதாகவும், தன்னை சாதிப் பெயரைச் சொல்லி அவர் அவதூறாக பேசுவதாகவும் ஜூன் 18 இல் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பாண்டி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகாரின் பேரில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை தனது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பாண்டி வந்தார். 
அலுவலகம் முன்பாக தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி அவர் தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை தடுத்து மீட்டனர். இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்த போலீஸார், அவரது புகார் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமரசம் கூறி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளித் தரப்பில் கூறுகையில், நாங்கள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். 
அவர் கூறுவது போன்ற சம்பவம் எதுவும் பள்ளியில் நடைபெறவில்லை. யாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் பாண்டி இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com