தியாகிகள் ஓய்வூதியம்: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
By DIN | Published On : 05th July 2019 09:59 AM | Last Updated : 05th July 2019 09:59 AM | அ+அ அ- |

மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்கக் கோரிய தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் கலியன் (100). சுதந்திரப் போராட்டத் தியாகியான இவர், கடந்த 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெறும் இவர், தனக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். அதில், தன்னுடன் சிறையிலிருந்த தியாகிகளான காளிமுத்தன், சாமி ஆகியோரின் சான்றிதழ்களையும் இணைந்திருந்தார். ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால், ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதில், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2014-இல் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தார். ஆனால், சிறையில் இருந்ததற்கு ஆதாரமாக முதன்மையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த 2018-இல் மத்திய அரசு அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதை எதிர்த்து, தியாகி கலியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு செய்திருந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி மனுதாரருக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசின் உள்துறைச் செயலர்(தியாகிகள் பிரிவு) தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் நாட்டின் விடுதலைக்காக சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளார். இவரைப் போன்றவர்களின் தன்னலமற்ற தியாகத்தால்தான் விடுதலை கிடைத்தது. இதற்காக பாடுபட்டவர்களுக்கு விடுதலை கிடைத்த பிறகு ஓய்வூதியம் மறுப்பது ஏற்புடையதல்ல.
அரசுகள் வழங்கும் ஓய்வூதியம் மிகக்குறைவான தொகையே. மாநில அரசு ஓய்வூதியம் வழங்கும்போது மத்திய அரசு மறுக்கிறது. கலியன் தனது 40 வயதில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியுள்ளார். இவருக்கு ஓய்வூதியம் மறுப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. அதிகாரிகளின் பிடிவாதத்தால், மனுதாரர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கலியனுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.