மீன் பிடிக்க கண்மாயில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: மீனவர்கள் கூட்டுறவுச் சங்க தலைவர் விளக்கமளிக்க உத்தரவு
By DIN | Published On : 05th July 2019 09:55 AM | Last Updated : 05th July 2019 09:55 AM | அ+அ அ- |

மீன் பிடிப்பதற்காக முறையான அனுமதியின்றி கண்மாயில் தண்ணீர் திறக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு தொடர்பாக, மதுரை தாலுகா மீனவர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆஜராகி விளக்கமளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அருகே கூத்தியார்குண்டைச் சேர்ந்த பச்சம்மாள் தாக்கல் செய்த மனு:
நான், மதுரை தாலுகா மீனவர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சங்கத்தின் அதிகாரத்துக்குள் ஆறு கண்மாய்கள் வருகின்றன. அரசாணையின்படி, அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் சம்பந்தப்பட்ட கண்மாய்களில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொகையினைச் செலுத்தி, மீன் பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனடிப்படையில், அந்த ஆறு கண்மாய்களையும் பராமரித்து அதிலிருந்து வரக்கூடிய வருவாயை நம்பி பலர் வாழ்கின்றனர்.
இந்நிலையில், இந்த சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், துணைத் தலைவரும் எவ்வித ஆலோசனையுமின்றி, பொதுப்பணித் துறையின் முதன்மைப் பொறியாளரின் அனுமதியுமின்றி, கண்மாய்களில் தண்ணீரை திறந்துவிட்டனர். இது சம்பந்தமாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, மீன் பிடிப்பதற்காக முறையான அனுமதியின்றி கண்மாயில் தண்ணீர் திறக்கப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மதுரை தாலுகா மீனவர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.