பெண் தலைமைக் காவலர் பாலியல் பலாத்காரம்: சாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 08th July 2019 09:28 AM | Last Updated : 08th July 2019 09:28 AM | அ+அ அ- |

மதுரையில் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக, பெண் தலைமைக் காவலர் அளித்த புகாரின் பேரில் சாமியார் உள்பட 4 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி (29). இவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். சந்தானலட்சுமி தனது கணவர் சீனிவாசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சந்தானலட்சுமி, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, பூமிநாதன், ஆறுமுகம் ஆகியோரை அணுகி ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். அவர்கள் ஜோதி என்ற சாமியாரை அறிமுகம் செய்து வைத்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி சந்தானலட்சுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து சந்தானலட்சுமி மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சனிக்கிழமை தன்னை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார். இதையடுத்து, மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீஸார் சாமியார் ஜோதி, பூமிநாதன், ஆறுமுகம் மற்றும் பூமிநாதனின் தந்தை கரந்தமலை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.