அறிவியல் மூலம் நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்: சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி சி.கே.முரளிதரன்

அறிவியல் மூலம் நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மத்திய தோல் ஆராய்ச்சி

அறிவியல் மூலம் நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி சி.கே.முரளிதரன் கூறினார். 
 மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில், பள்ளிகளுக்கு  விஞ்ஞானிகள் நேரில் சென்று ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் "ஜிக்யாசா' திட்டம் மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
  இதன்  தொடக்க விழாவில்  அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎஸ்ஐஆர்) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன  முதுநிலை விஞ்ஞானி சி.கே.முரளிதரன் பேசியது:  
மாணவர்கள் அறிவியல் பாடத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். மாணவர்கள் பாடங்களைக் கற்பதோடு நின்று விடாமல் பாடங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். ஏன், எதற்கு என்று கேள்விகள் எழ வேண்டும். கேள்விகள் எழும்போதுதான் பிரச்னைக்குரிய தீர்வுகள் கிடைக்கும். அறிவியல் அறிவு இருந்தால் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். 
அண்மைக் காலமாக அறிவியல் பாடங்களை மாணவ, மாணவியர் படிப்பது குறைந்து வருகிறது. ஆராய்ச்சி நோக்கத்தோடு உள்ள மாணவர்கள் அறிவியல் கற்றால் பெரும் அளவில் சாதிக்க முடியும்.  அறிவியல் இல்லாத தொழில்நுட்பம் வெற்றி பெற முடியாது. மாணவர்கள் அறிவியலை ஆர்வத்தோடு கற்று விஞ்ஞானிகளாக மாறும் பட்சத்தில் நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும் என்றார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னை மண்டல துணை ஆணையர் சி.மணி:  கேந்திரிய வித்யாலயாவும்,  அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் (சிஎஸ்ஐஆர்) ஆகியன இணைந்து 2017-இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள், ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆய்வு தொடர்பான புரிதல்களை ஏற்படுத்துவது என்று திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள் நேரில் சென்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆராய்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள 38 சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி மையங்களுக்கு  மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு ஆராய்ச்சிகள் நடப்பது,  அதற்கான கருவிகள் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும் 5 நாள்கள் முதல் 15 நாள்கள் வரை மாணவர்கள் ஆய்வுக் கூடங்களிலேயே தங்கியிருந்து ஆய்வுகள் தொடர்பாகப் பயிற்றுவிக்கப்படும். நாடு முழுவதும் விஞ்ஞானிகள் பற்றாக்குறை இருப்பதால் மத்திய அரசு இத்திட்டத்தை தொடங்கி ஊக்குவித்து வருகிறது. 
தமிழகத்தில், மதுரை மாவட்டம் இடையப்பட்டி, சிவகங்கை மாவட்டம் இலுப்பகுடி, கோவை மாவட்டம் இடையர்பாளையம், திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் நிகழ் ஆண்டில் திறக்கப்படும் என்றார்.
நிகழ்வின் முதல் நாளான புதன்கிழமை, நரிமேடு கேந்திரிய வித்யாலயா மற்றும் ராமேசுவரம்,  பாம்பன்  கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான வியாழக்கிழமை திருப்பரங்குன்றம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். 
மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை விஞ்ஞானிகள் குழுவினர், திருநெல்வேலி சென்று அங்கு இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.    நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் இந்த  நிகழ்வில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com