மாட்டுத்தாவணி - ஆரப்பாளையம் இடையே இடைநில்லா பேருந்து சேவை

மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை

மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் இடைநில்லா பேருந்து சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
மதுரையில் இருந்து தேனி,  திண்டுக்கல், கோவை, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு செல்லும் வெளியூர் பேருந்துகள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 
இதைத் தவிர பிற மாவட்டங்களுக்குச் செல்லும் வெளியூர் பேருந்துகள் அனைத்தும் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்துநிலையத்தில் இருந்தும், நகரப் பேருந்துகள் அனைத்தும் பெரியார் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. 
வெளிமாவட்ட  பேருந்துகள் வந்து செல்லும் எம்ஜிஆர், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படக் கூடியவையாக உள்ளன. இவ்விரு பேருந்து நிலையங்களையும் இணைப்பதற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இப்பேருந்துகள் எம்ஜிஆர் நிலையத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், தமிழ்ச் 
சங்கம் சாலை வழியாக ஆரப்பாளையத்துக்கு இயக்கப்படுகின்றன.  சில பேருந்துகள் பெரியார் நிலையம் வழியாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
 ஆரப்பாளையத்தில் இருந்து எம்ஜிஆர் நிலையம் செல்வதற்கு 40 நிமிடங்கள் வரை ஆகிறது. பள்ளி, அலுவலக நேரங்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களில் ஒரு மணி நேரம் வரை ஆகிறது.  மதுரை தவிர வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் இரு பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்கே அதிகநேரம் செலவிடும் நிலை உள்ளது.
இதைத் தவிர்ப்பதற்காக ஆரப்பாளையம் மற்றும் எம்ஜிஆர் நிலையங்களை இணைக்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இடைநில்லா பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக ஆரப்பாளையம் - எம்ஜிஆர் நிலையம் இடையே 3  நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஓட்டுநர் மட்டுமே இருப்பார். பேருந்து நிலையங்களில் நடத்துநர் பயணச்சீட்டு வழங்கிவிட்டு இறங்கி விடுவார். ஆரப்பாளையத்தில் இருந்து அருள்தாஸ்புரம் புதிய பாலம்,  செல்லூர், கோரிப்பாளையம், மாவட்ட நீதிமன்றம் வழியாக எம்ஜிஆர் நிலையத்தை அடையும்.  வழியில் இறங்கவோ, ஏறவோ முடியாது. வெளியூர் பயணிகள் குறைவான நேரத்தில் இரு பேருந்து நிலையங்களையும் அடைய முடியும். கடந்த 4 நாள்களாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:
  வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஓட்டுநர் மட்டும் இருக்கக் கூடிய இடைநில்லா பேருந்துகள் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் இடைநில்லா நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
கடந்த  4  நாள்களில் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது 3 பேருந்துகளும் தலா 10 நடை இயக்கப்பட்டு வருகிறது. இடைநில்லா பேருந்துகளில்  பயணக் கட்டண வேறுபாடு கிடையாது. 
இச்சேவைக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, 
அடுத்தகட்டமாக மதுரை - திருமங்கலம் இடையே இடை நில்லா நகரப் பேருந்து சேவை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com