மதுரையில் 3 பெண்களிடம் 16 பவுன் நகைகள் பறிப்பு: ஒருவர் கீழே விழுந்து பலத்த காயம்
By DIN | Published On : 13th July 2019 11:07 AM | Last Updated : 13th July 2019 11:07 AM | அ+அ அ- |

மதுரையில் இரு சக்கர வாகனங்களில் சென்ற 3 பெண்களிடம் இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 16 பவுன் நகைகளை வியாழக்கிழமை பறித்துச் சென்றுள்ளனர்.
நகை பறிப்பின்போது வாகனத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (36). இவர் தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் கோ.புதூர் சிப்காட் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் சந்திரமோகன் மனைவியின் கழுத்தில் இருந்த 3.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், அவரது மனைவி சண்முகவள்ளி(37). இருவரும் இரு சக்கர வாகனத்தில் குலமங்கலம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சண்முகவள்ளி கழுத்திலிருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காயம்: மதுரை ஊமச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (63). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி ஜானகியுடன் இருசக்கர வாகனத்தில், முனிச்சாலையில் குடியிருக்கும் தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடச்சனேந்தல் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் ஜானகி கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில், ஜானகி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோ.புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.