சுடச்சுட

  

  மழை நீர் சேகரிப்பு திட்டம்: மாநகராட்சியில் வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

  By DIN  |   Published on : 13th July 2019 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை நகரில் மழை நீர் சேகரிப்பை  அமல்படுத்தும் விதமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. 
  மழை நீர் சேகரிப்பு திட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனை உள்பட 602 கட்டடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளன. இவற்றில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளவை, இல்லாதவை என வகை பிரிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத கட்டடங்களில் அவற்றை விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தும் பட்டியலின் அடிப்படையில் வீடுகள், கடைகள் உள்பட 3.20 லட்சம் கட்டடங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 
  இவற்றில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு உள்ள கட்டடங்களை தரம் பிரிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர வரிவிதிப்புப் பட்டியலில் வராத வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களும் கணக்கெடுக்கப்பட உள்ளது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் 100 வார்டுகளுக்கும் வீடு வீடாகச்சென்று மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குமாறு வீடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த உள்ளனர். 
  இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கான தொடக்க நிலைப்பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் சேகரிப்பு அமைப்பு பல வகைகளில் உள்ளது. மேலும் கட்டடத்தின் தன்மையை பொறுத்து அவற்றின் அமைப்பும் மாறுபடும். எந்த வகையிலான மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும். அதன்படி மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.  
  மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர் தலைமையில் கண்காணிப்புக்குழுவும் உருவாக்கப்பட உள்ளது. மதுரை நகரில் உள்ள நீர்நிலைகளையும் கணக்கெடுத்து அங்கும் மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai