"மாணவர்களின் தனித்திறமையே எதிர்காலத்தை உருவாக்கும்'
By DIN | Published On : 13th July 2019 11:09 AM | Last Updated : 13th July 2019 11:09 AM | அ+அ அ- |

மதுரை தியாகராஜர் கல்லூரியில் பிகாம் (ஹானர்ஸ்) புதிய பட்டப்படிப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் கருமுத்து டி.கண்ணன் தலைமை வகித்துப்பேசும் போது, மாணவர்களின் தனித்திறமை தான் அவர்களுக்குரிய அடையாளத்தை ஏற்படுத்தும். புதிய பட்டப்படிப்பில் ஜிஎஸ்டி, நிரந்தர வருமான வரி எண் மற்றும் வருமான வரி படிவங்கள் தாக்கல் ஆகியவற்றை கற்றுத்தருவதோடு நின்று விடாமல் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். மாணவர்கள் டேலி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். வணிக இதழ்கள், நடுப்பக்க சிறப்புக்கட்டுரைகள் ஆகியவற்றை படித்து தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
பட்டப்படிப்பை தொடக்கி வைத்து கல்லூரிச்செயலர் கருமுத்து கே.தியாகராஜன் பேசும்போது, மாணவர்கள் தங்களது இலக்கை எட்டுவதற்கு சிறப்பான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மாணவர்கள் தங்கள் துறையில் சிறந்தவர்களாக இருந்தால் மட்டுமே தற்போதைய கார்பரேட் உலகில் போட்டியை சமாளிக்க முடியும் என்றார்.
துறைத்தலைவர் ஐ.நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாண்டியராஜா, தணிக்கையாளர் சின்னசாமி கணேசன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.