சுடச்சுட

  

  குடிமராமத்துப் பணிக்கு தனி கண்காணிப்பு அலுவலர் நியமனம்

  By DIN  |   Published on : 14th July 2019 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  குடிமராமத்துப் பணிகள் செயலாக்கத்தைக் கண்காணிப்பதற்கு செயற்பொறியாளர் நிலையில், தனி கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  குடிமராமத்து திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஏற்கெனவே 2 கட்டங்களாக நீர்நிலைகள் புனரமைப்புப் பணி முடிவடைந்துள்ளது. தற்போது, மூன்றாவது கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே நடந்த குடிமராமத்துப் பணிகளில் விவசாயிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கண்மாய்கள் புனரமைக்கும்போது சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர்களை கலந்து ஆலோசிக்கவில்லை, விவசாயிகள் குழு அமைத்ததில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக நடைபெற உள்ள குடிமராமத்துப் பணியில் இத்தகைய புகார்கள் எழாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  மாவட்ட அளவில் பாசனதாரர்கள் கூட்டம் நடத்தப்பட்டதையடுத்து, பொதுப்பணித் துறையின் வடிநிலக் கோட்டம் வாரியாக பயிற்சியும், அதன் பிறகு பணிகள் நடைபெற உள்ள ஒவ்வொரு கண்மாயின் பாசனதாரர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
  மதுரை மாவட்டத்தில் பெரியாறு-வைகை, பெரியாறு பிரதானக் கால்வாய், குண்டாறு, வைப்பாறு என 4 வடிநிலக் கோட்டங்களில் மொத்தம் 135 கண்மாய்களில் ரூ. 43 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலராக, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு மதுரை மண்டல திட்டமிடல் பிரிவு செயற்பொறியாளர் எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  பாசனதாரர்களுக்கு பயிற்சி: மதுரை தல்லாகுளத்தில் உள்ள  பொதுப்பணித் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குண்டாறு வடிநில கோட்டத்துக்கு உள்பட்ட பாசனதாரர்களுக்கான பயிற்சி வகுப்பில், குடிமராமத்து திட்ட செயலாக்கம் குறித்து கண்காணிப்பு அலுவலரான செயற்பொறியாளர் இளங்கோவன் விளக்கம் அளித்தார்.
  இதில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் த.சு. ராஜசேகர் பேசியதாவது:  நீர்நிலைகள் புனரமைக்கும்போது வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு, கால்வாய்களில் இருக்கும் முள்புதர்கள் அகற்றம், ஆழப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துதல், மடைகள் சரிபார்த்தல் என்ற வரிசையில் பணிகள் மேற்கொள்ளப்படும். குறைவான மழை பெய்தாலும், தடையின்றி தண்ணீர் வந்து சேருவதற்கு வரத்துக் கால்வாய்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். எனவேதான், இந்த முறை அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  அதேபோல், வரத்துக் கால்வாய்களில் மண் அரிப்பைத் தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் கற்கள் பதிக்கப்பட உள்ளன என்றார்.
  இதில், குண்டாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் விஸ்வநாத், உதவி செயற்பொறியாளர் லீலாவதி மற்றும் பாசனதாரர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai