பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறை மீது உயர்நீதி மன்றம் அதிருப்தி

ராமநாதபுரம் பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் வருவாய்த்துறையினர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு அதிருப்தி தெரிவித்தது.


ராமநாதபுரம் பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் வருவாய்த்துறையினர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு நிலமற்ற ஏழைகள் பிரிவில் அரசு சார்பில் 2015-இல் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நான்கு எல்லையை நிர்ணயம் செய்யக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு 2015-இல் லட்சுமி மனு அளித்தார். அதிகாரிகள் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதையடுத்து லட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை பரிசீலிக்க அரசுத் தரப்புக்கு 2015-இல் உத்தரவிட்டிருந்தார். 
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, லட்சுமி மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது. 
பொதுமக்களின் கோரிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகள் எப்படி அணுகுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதை ஏற்க முடியாது. 
மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் 4 வாரங்களில் நிறைவேற்ற வேண்டும். அது குறித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது நீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் என உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com