தமிழ்த்தேனீ இரா. மோகன் நினைவேந்தல்
By DIN | Published On : 15th July 2019 09:18 AM | Last Updated : 15th July 2019 09:18 AM | அ+அ அ- |

மதுரை உலகத் திருக்குறள் பேரவை மற்றும் புரட்சிக் கவிஞர் மன்றம் சார்பில் தமிழ்த் தேனீ பேராசிரியர் இரா. மோகன் நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரை காலேஜ் ஹவுஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசியது: தமிழ் என்னும் அற்புதமான ஒரு மொழி எந்த எந்த விதத்தில் எல்லாம் படைப்பு என்கிற தன்மையை உள்கொண்டிருக்கிறது. அது எப்படியெல்லாம் பரிணமித்து நிற்கிறது என உணர்ந்து படைப்பாளியாக பேராசிரியர் மோகன் 150 நூல்கள் எழுதியுள்ளார். ஒரு படைப்பாளி ஒரு காலகட்டத்தில் மண்ணை விட்டு சென்று தான் ஆகவேண்டும். ஆனால் படைப்பு என்கிற அற்புதத்தை உணர்ந்து படைப்பாளி பதிவு செய்யப்பட்ட பதிவுகள், எழுத்துகள், படைப்புகள் இந்த மண்ணிலே காலத்தை கடந்தும், தலைமுறைகளை கடந்தும் நிற்கிறது. இந்த படைப்புகளின் வீரியம் எந்த காலகட்டத்திலும் அழியாது. இது தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் கவுரவம் என்றார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் ரா.மோகன் அவர்களின் நினைவுகளுடன் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் வெளியிட, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை பெற்றுக் கொண்டார். மதிப்பியல் தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் பி.வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.