தாய் இறந்த பிறகு கிடைத்த அங்கன்வாடி பணி வளர்ப்புத் தாய்க்கு வழங்ககுழந்தைகள் ஆட்சியரிடம் கோரிக்கை
By DIN | Published On : 19th July 2019 05:22 AM | Last Updated : 19th July 2019 05:22 AM | அ+அ அ- |

தாய் இறந்துவிட்ட நிலையில் கிடைத்துள்ள அங்கன்வாடி பணியை, வளர்ப்புத் தாயாக இருக்கும் சித்திக்கு வழங்குமாறு, பெற்றோரை இழந்த குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மணப்பசேரியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் கடந்த 2012-இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதையடுத்து அவரது மனைவி பொம்மி, குழந்தைகள் விசாலினி, குணால் ஆகியோரை பாதுகாத்து வந்தார். இந்நிலையில், 2018-இல் நெஞ்சு வலியால் பொம்மியும் இறந்துவிட்டார்.
தாய்-தந்தையை இழந்த இரு குழந்தைகளையும் சித்தப்பா இமயவரம்பன், சித்தி பாண்டிமீனாள் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். தற்போது கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விசாலினி 11-ஆம் வகுப்பும், குணால் 9-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த 2017-இல் நடைபெற்ற அங்கவன்வாடி சமையலர் பணிக்கான நேர்காணலில் பொம்மி பங்கேற்றிருந்தார். அண்மையில் அங்கன்வாடி பணியாளர், சமையலர் காலியிடங்களைப் பூர்த்தி செய்ய நியமன உத்தரவு வழங்கியபோது கணவரை இழந்தவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் சமையலர் பணிக்கு பொம்மி தேர்வாகியிருந்தார். அவர் இறந்துவிட்ட நிலையில், தங்களைப் பராமரித்து வரும் சித்தி பாண்டியம்மாளுக்கு அப் பணியை ஒதுக்குமாறு கூறி விசாலினி, குணால் இருவரும் மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.