Enable Javscript for better performance
பெண் காவலர் தற்கொலை விவகாரம்: விசாரணையை 6 வாரங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பெண் காவலர் தற்கொலை விவகாரம்: விசாரணையை 6 வாரங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் டிஎஸ்பியிடம் முறையாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில், 6 வாரங்களில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
    மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றிய அரசுப்  பள்ளி ஆசிரியர் சுரேஷ் தாக்கல் செய்த மனு: எனது மனைவி ராணி, பேரையூர் காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தார். அப்போது திருமங்கலம் டிஎஸ்பி-யாக இருந்த ரவிச்சந்திரன் என் மனைவியுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில் எனது மனைவி 2013 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தான் காரணம். ஆனால் பேரையூர் போலீஸார் விசாரணையை முறையாக நடத்தவில்லை. இதனால் வழக்கு விசாரணையை வேறு மாவட்டப் போலீஸாரிடம் மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ரவிச்சந்திரன் தலையீடு காரணமாக, சிபிசிஐடி போலீஸாரும் வழக்கை முறையாக நடத்தவில்லை. பாலியல் புகார் குறித்து விசாரிக்க அனைத்து அலுவலங்களிலும் தனி விசாரணைக் குழுக்கள் உள்ளன. எனவே காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் தனிக் குழு ரவிச்சந்திரனை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ரவிசந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது. காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் தனிக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. 
    இதையடுத்து நீதிபதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர் கிருஷ்ணவேணி சேர்க்கப்பட வேண்டும். இந்த விசாரணையை 6 வாரங்களில் முடிக்க வேண்டும். மேலும் மதுரை மாவட்டத்தில் பணியில் இருக்கும் டிஎஸ்பி ரவிச்சந்திரனை, விசாரணை முடியும் வரை தொலைவில் உள்ள வேறு மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai