தேசிய கல்விக் கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 29th July 2019 08:45 AM | Last Updated : 29th July 2019 08:45 AM | அ+அ அ- |

தேசிய வரைவுக்கல்வி கொள்கை மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கை 2019- மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை கைவிட வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் மற்றும் 5 ஆயிரம் இடங்களில் பிரசார இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் ஊமச்சிகுளத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஞ்சம்பட்டி கிளைச் செயலர் சி.முருகன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் து.ராமமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கையெழுத்து இயக்கத்தை விளக்கியும், புதிய கல்விக்கொள்கையின் அபாயம் குறித்தும் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன் பேசினார். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதேபோல செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், செல்லம்பட்டி ஒன்றியச் செயலர் வி.பி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, வாடிப்பட்டி ஒன்றியச் செயலர் ஏ.வேல்பாண்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.