மதுரையில் எண்ணெய் வகைகளின் விலை உயர்வு
By DIN | Published On : 29th July 2019 08:46 AM | Last Updated : 29th July 2019 08:46 AM | அ+அ அ- |

பருவ மழை பொய்த்து வருவதால் மதுரையில் எண்ணெய் வித்துகளின் வரத்துக் குறைந்து எண்ணெய் வகைகளின் விலை லிட்டருக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுகளை விட நிகழாண்டில் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் வெயிலின் அளவு 105 பாரன்ஹீட்டை தாண்டியே பதிவாகியது. கோடை மழையும் கைவிட்டது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழையும் பொய்த்துள்ளது. இதனால் பழங்கள், காய்கறிகள், பூக்களின் விளைச்சல் குறைந்து அதன் விலைகள் உயர்ந்துள்ளன. இந்நிலையில், நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து எண்ணெய் வகைகளின் விலையும் ரூ.50 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட எண்ணெய், எண்ணெய் வித்துகள் சங்க முன்னாள் செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 1 கோடியே 50 லட்சம் டன்கள் அளவு, எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது 1 கோடியே 60 லட்சம் டன்கள் அளவு, எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் எண்ணெய் வித்துகள் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. இதனால் லிட்டருக்கு ரூ.50 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல பால் வரத்தும் இல்லை. இதனால் நெய் மற்றும் வெண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. எண்ணெய் வகைகள் (லிட்டருக்கு) பாமாயில் ரூ.63, சூரியகாந்தி எண்ணெய் ரூ.90, கடலை எண்ணெய் ரூ.150, தீபம் விளக்கு எண்ணெய் ரூ.100, நல்லெண்ணெய் (சாதா) ரூ.260, (தும்பை) ரூ.320, வனஸ்பதி ரூ.75, ரைஸ்பிரான் எண்ணெய் ரூ.94, நெய் ரூ.530 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.