முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கல்குவாரியில் லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை: ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினர் தர்னா
By DIN | Published On : 30th July 2019 08:40 AM | Last Updated : 30th July 2019 08:40 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கல்குவாரியில் லாரி ஓட்டுநரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கைக் கோரி, அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரையூர் அருகே உள்ள கீழக் காடனேரியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் குமார், காடனேரியில் செயல்படும் கல்குவாரியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது, குவாரியில் ஏற்பட்ட விபத்தில் குமார் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், குமாரை கல்குவாரியில் அடித்துக் கொலை செய்துள்ளனர் எனக் கூறி அவரது மனைவி செல்வி மற்றும் அவரது குழந்தைகள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
கல்குவாரியில் நிகழும் முறைகேடுகளை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதால் குமாரை அடித்துக் கொலை செய்து விட்டதாக செல்வி தெரிவித்தார். காவல் துறையினரின் விசாரணையில் கொலை குறித்து ஆதாரங்கள் கிடைத்த நிலையிலும், குவாரி உரிமையாளர் மற்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தியும், ஆட்சியர் அலுவலக கட்டடத்தின் பிரதான நுழைவாயில் முன்பு அமர்ந்து கொண்டு அங்கிருந்து செல்வதற்கு மறுத்தனர்.
பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்திய போலீஸார், குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.