முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 30th July 2019 08:45 AM | Last Updated : 30th July 2019 08:45 AM | அ+அ அ- |

மதுரை அருகே விசாரணைக் கைதி துன்புறுத்தலால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதால் வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த பூமயில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் மார்க்கண்டேயன். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு எனது மூத்த மகள் காணாமல் போனார்.
இதுகுறித்து ஊமச்சிக்குளம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தோம். இந்த வழக்கு சம்பந்தமாக எனது கணவரை விசாரணைக்காக போலீஸார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மறுதினம் என்னை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஊமச்சிக்குளம் போலீஸார் அழைத்தனர்.
நானும், எனது 2 ஆவது மகளும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தப்போது, அங்கு எனது கணவர் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக விசாரித்த போது, காவல்நிலையத்தின் பின்புறம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், எனது கணவர் போலீஸார் துன்புறுத்தலால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பார். எனவே எனது கணவர் மரணத்திற்கு காரணமான போலீஸார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறைச் செயலர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரரின் கணவர் காவல் நிலையத்தில் மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டதால், அவர் தற்கொலை செய்துக்கொண்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிக்குளம் சரக டி.எஸ்.பி. தங்கவேலு, காவல் ஆய்வாளர் பாலாஜி, சார்பு ஆய்வாளர் ராதா மகேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் சி. ஜெயராமன் ஆகியோர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் சோலைமலை கண்ணன், முருகன் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். எனவே 2 மாதம் கால அவகாசம் வழங்கவேண்டும் என பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.