முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
முத்தலாக் தடை மசோதா: அதிமுகவின் இரட்டை வேடத்தை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்வர்
By DIN | Published On : 30th July 2019 08:50 AM | Last Updated : 30th July 2019 08:50 AM | அ+அ அ- |

முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
திருநெல்வேலி செல்லும் வழியில் மதுரை தனியார் விடுதியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சிறுபான்மையின மக்கள் தான் தெரிவிக்க வேண்டும். முத்தலாக் தடை மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாநிலங்களவையில் எதிர்ப்புத் தெரிவிக்க உள்ளதாக தற்போது அக் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதிமுகவின் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்வர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ. 28 ஆயிரம் கோடி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான நிதி மட்டும் ரூ.1729 கோடி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதிலிருந்தே அதிமுக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ளலாம்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் திருடப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், அத்தொகுதி மக்கள் அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவர் என்றார்.