மதுரையில் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட ரூ.100 கோடி திட்டம்!

நகரங்களுக்கு இணையான வசதிகளை கிராமங்களில் உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் இயக்கம்,

நகரங்களுக்கு இணையான வசதிகளை கிராமங்களில் உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் இயக்கம், மதுரை மாவட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளது.
நகரங்களையொட்டி சிறுநகரங்களை உருவாக்கும் வகையில் தேசிய ரூர்பன் இயக்கம் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-இல் அறிவித்தது. இதன்படி, நகரங்களையொட்டி தொடர்ச்சியான கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிகளில் நகரங்களுக்கு இணையான அனைத்து அடிப்படை வசதிகளையும்  கொண்டு வருவது இதன் நோக்கம்.
இதில் விவசாயம்,  கல்வி, சுகாதாரம், குடிநீர்,  திட, திரவக் கழிவு மேலாண்மை,  சாலை, மழைநீர் வடிகால், தெருவிளக்கு, போக்குவரத்து ஆகிய வசதிகளை மேம்படுத்தல், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு,  நவீன தகவல் தொழில்நுட்பம் சார்ந்த டிஜிட்டல் சேவைகள் ஆகிய வசதிகளுக்கான பணிகளை இத்திட்டத்தில் மேற்கொள்ளலாம்.
ரூர்பன் இயக்க கிராமங்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அதில் குறிப்பிடப்படும் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் சாராத பணிகளுக்கு ரூர்பன் இயக்கத்தின் கீழ் தொகுப்பு நிதி வழங்கப்படும். இந்த நிதியானது விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையிலான மதிப்பீட்டில் 30 சதவீதம் அல்லது ரூ.30 கோடி இதில் எது குறைவோ அத் தொகை வழங்கப்படும்.
முதல்கட்டமாக தமிழகத்தில் குத்தம்பாக்கம் (திருவள்ளூர்), வாணியன்குடி (சிவகங்கை), வேலாயுதம்பாளைம் (திருப்பூர்), மதுக்கரை (கோவை), சுத்தமல்லி(திருநெல்வேலி) ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 2-ம் சுற்று நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் செயல்பாட்டில் உள்ளன.
2 ஆம் கட்டமாக,  சிங்கபெருமாள்கோவில் (காஞ்சிபுரம்), கோவில்பாப்பாகுடி (மதுரை),  திருமலை சமுத்திரம் (தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் இதைச் செயல்படுத்த மத்திய அரசால் 2016-இல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி கோவில்பாப்பாகுடி ஊராட்சிக்கான ரூர்பன் இயக்கத் திட்ட அறிக்கை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் தயாரிக்கப்பட்டு, மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் ரூ.100.26  கோடியில் இத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இதில், மத்திய, மாநில அரசுகள் சாராத திட்டங்களுக்காக இடைநிரப்பு நிதியாக ரூ.30 கோடிக்கு ஒப்புதல் அளித்து, அதன் முதல்கட்டமாக ரூ.5.4 கோடி, கடந்த 2017 டிசம்பரில் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 
 கோவில்பாப்பாகுடி கிராமத்தில் இதைச் செயல்படுத்துவதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,  திட்ட செயலாக்கத்துக்கான பயிற்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பின்னர் இதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. முதல்கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், கோவில்பாப்பாகுடி ஊராட்சிக்கான ரூர்பன் இயக்கம்  இன்னும் அறிக்கை நிலையிலேயே உள்ளது. இத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படும் நிலையில்,  நகரத்துக்கு இணையான வசதி கிடைக்கும்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறுகையில், இதற்காக  ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இத் திட்டம் கருத்துரு அளவிலேயே உள்ளது.  பணிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறியது: 
கோவில்பாப்பாகுடியை யொட்டிய 16 கிராமங்களை உள்ளடக்கி ரூ.100.26 கோடியில் ரூர்பன் இயக்கத்தை செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத் திட்டம் 2017-18,  2018-19,  2019-2020 என 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.  அடுத்தகட்ட பணிக்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதும் விரைவில் பணிகள் தொடங்கும் என்றனர்.
முதல்கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், கோவில்பாப்பாகுடி ஊராட்சிக்கான ரூர்பன் இயக்கம்  இன்னும் அறிக்கை நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே, இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதே  அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com