Enable Javscript for better performance
காமராஜர் பல்கலை.யில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் குளறுபடி: விரிவுரையாளர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    காமராஜர் பல்கலை.யில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் குளறுபடி: விரிவுரையாளர்கள் புகார்

    By DIN  |   Published on : 01st June 2019 09:53 AM  |   அ+அ அ-   |    |  

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாக விரிவுரையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ்  மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள் என 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  
    இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் பருவமுறை தேர்வுகள் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன. விடைத்தாள்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகத்தில் வைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதன்படி 2019 ஏப்ரல் பருவத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் வெவ்வேறு மையங்களில் நடைபெற்று வருகிறது.  அனைத்து பாடப் பிரிவுகளிலும் 1200-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2019 ஏப்ரல் பருவத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுதொடர்பாக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கூறியது:ஒவ்வொரு ஆண்டும் பருவத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதிக் கடிதம் தபால் வாயிலாக விரிவுரையாளர்கள் வீட்டுக்கே அனுப்பப்படும். மேலும் பல்கலைக்கழகத்தில் இருந்து தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும். இவை விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே அனுப்பப்பட்டு விடும். 
    ஆனால் இந்த ஆண்டு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கப்பட்டும் விரிவுரையாளர்களுக்கு முறையாக தபால் அனுப்பப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் பலர் ஈடுபடவில்லை. 
    மேலும் பலர் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், சாத்தூர் என வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். அவ்வாறு தொலைவில் இருந்து விடைத்தாள் திருத்த வந்தாலும் பகல் 12.30 மணிக்குதான் விடைத்தாள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விரிவுரையாளரும் நாள் ஒன்றுக்கு 36 விடைத்தாள்கள் திருத்த வேண்டும் என்பது யுசிஜி விதி. ஆனால் பகல் 12 மணிக்கு மேல் விடைத்தாள்கள் வழங்கப்பட்டால் மாலை 5 மணிக்குள் எவ்வாறு 36 விடைத்தாள்களை திருத்த முடியும்? விடைத்தாள் திருத்துவதில் முறைகேடுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக  முன்பெல்லாம் விடைத்தாள்களுக்கு முதல் நாளிலேயே டம்மி எண்கள் வழங்கப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கெல்லாம் விடைத்தாள் திருத்துவதற்கு வழங்கப்படும். ஆனால் தற்போது இன்று திருத்தப்படவுள்ள விடைத்தாள்களுக்கு காலையில் தான் டம்மி எண்கள் வழங்கப்படுகிறது இதனால்  அனைத்து பணிகளும் தாமதமாகிறது.
    மேலும் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் உதவியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் விடைத்தாள்கள் எடுத்து வருவது, விநியோகிப்பது, கட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விடைத்தாள் திருத்தும் குழுத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களே செய்ய வேண்டியுள்ளது.
    அடிப்படை வசதிகள் இல்லை:
     மையங்களில் குடிநீர், கழிப்பறை, விடைத்தாள் திருத்துவதற்கு ஏதுவாக மேஜை, நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்வது இல்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க துணைவேந்தர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் அவை அனைத்தும் வீணாகின்றன என்றனர். 
    இதுகுறித்து பல்கலைகக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன்,  பல்கலைக்கழக அதிகாரிகளை அழைத்து, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு உதவியாளர்களை உடனடியாக அனுப்பவும் உத்தரவிட்டார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp