கலை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்றம் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்றம் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:  மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் சார்பில் வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.   கடந்த 2002-2003 முதல் 2017-2018 வரை மதுரை மாவட்டத்தில் 80 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டுக்கான விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். 18 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரையிலானவர்களுக்கு கலை வளர்மணி, 36 முதல் 50 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு கலைச் சுடர்மணி, 51 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்கப்படும்.
 பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், குதிரையாட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், கைச் சிலம்பாட்டம், வில்லிசை உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஏற்கெனவே மாவட்ட கலைமன்றத்தின் விருதுகளைப் பெற்றவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த  தகுதியுள்ள கலைஞர்கள்  விருதுக்கான தங்களது விண்ணப்பத்துடன், வயதுச் சான்று, முகவரிச் சான்று, கலை அனுபவச் சான்று ஆகியவற்றுடன் மண்டல கலை பண்பாட்டு மையம், பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ், மதுரை - 2 என்ற முகவரிக்கு ஜூன் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com