உசிலை.யில் தனியார் பள்ளி ஊழியர்கள் போராட்டம்
By DIN | Published On : 09th June 2019 02:51 AM | Last Updated : 09th June 2019 02:51 AM | அ+அ அ- |

உசிலம்பட்டியிலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஊழியர்கள், அப்பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்யக் கோரி, அரை நிர்வாணப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
இப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த வாகன ஓட்டுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோரை, பள்ளி முதல்வர் இடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து, பள்ளி ஊழியர்களான பாண்டி, ரவிக்குமார், ராஜா, கிருஷ்ணன் ஆகியோர் இலை தழைகளை கட்டிக் கொண்டு, பள்ளி முன்பாக அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்துக்காக பள்ளி நிர்வாகம் எங்களை பழி வாங்குகிறது. எனவே, முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி போலீஸார், பள்ளி ஊழியர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.