பல்கலைக்கழகச் சுற்றறிக்கையில் யுஜிசி தகுதியை அறிவிக்க துணைவேந்தரிடம் மனு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் யுஜிசி அறிவித்துள்ள

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் யுஜிசி அறிவித்துள்ள தகுதியை குறிப்பிட வேண்டும் என்று துணைவேந்தர் மு.கிருஷ்ணனிடம், தனியார் சுயநிதிக் கல்லூரி விரிவுரையாளர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணனை,  பல்வேறு சுயநிதிக் கல்லூரிகளைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர். 
அதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி யுஜிசி அறிவித்துள்ள கல்வித்தகுதி உள்ள பேராசிரியர்கள் மட்டுமே வரும் கல்வியாண்டில் பணி தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதி குறித்து உயர்நீதிமன்றம் 2014-இல் தெரிவித்திருந்தும் கல்லூரிகளுக்கு தற்பொழுதுதான் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பேராசிரியர்கள் பலரும் எம்பில் தகுதியுடன் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியில் ஜூலை 11 2009-க்கு முன் எம்பிஎல் அல்லது பிஹெச்டி பதிவு செய்திருப்பவர்களும் தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல்கலைக் கழக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகங்கள் 2009-க்கு முன்பாக எம்பில் முடித்து யுஜிசி தகுதிப் பெற்றவர்களையும் கூட விரிவுரையாளராக பணியாற்ற தகுதி இல்லாதவர்களாகவே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 எனவே யுஜிசி அறிவித்துள்ள 2009-க்கு முன்பாக எம்பில் முடித்தவர்களும் தகுதியானவர்கள்தான் என்று பல்கலைக் கழக சுற்றறிக்கையில் குறிப்பிட்டு கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். ஜூலை 11, 2009-க்கு பின்னர் எம்பில், பிஹெச்டி பதிவு செய்தவர்கள் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ள 5 ஆண்டுகால அவகாசம் வழங்க வேண்டும். 
 தமிழகத்தில் பிஹெச்டி ஆய்வு வழிகாட்டிகள் அதிகம் இல்லை. மேலும் செட் தேர்வு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். 
எனவே யுஜிசி நிர்ணயித்துள்ள தகுதிகளான எம்பில், பிஹெச்டி ஜூலை 11, 2009-க்கு முன் பதிவு, நெட், செட், பிஹெச்டி எனத் தெளிவாக குறிப்பிட்டு பல்கலைக் கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதன்மூலம் 10 ஆயிரம் விரிவுரையாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியும் பாதுகாக்கப்படும். மேலும் யுஜிசி குறிப்பிட்டுள்ள தகுதிகள் இன்றி தற்போது  பணியாற்றும் விரிவுரையாளர்கள் தங்கள் தகுதிகளை மேம்படுத்திக்கொள்ள 5 ஆண்டு கால அவகாசத்தை உயர்நீதிமன்றம் மூலமாக பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மனுவை துணைவேந்தர் மற்றும் பதிவாளர்( பொறுப்பு) ஆர்.சுதா, கல்லூரி வளர்ச்சிக் குழுத் தலைவர் நல்லகாமன் ஆகியோரிடமும் அளித்தனர். 
 மனு தொடர்பாக பல்கலைக் கழக அதிகாரிகள் கூறும்போது, பல்கலைக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் யுஜிசி அறிவித்துள்ள கல்வித் தகுதி என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யூஜிசி-யின் கல்வித்தகுதியில் ஜூலை 11, 2009-க்கு முன்பு எம்பிஎல் அல்லது பிஹெச்டி முடித்து தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள் தகுதி பெற்றவர்கள் என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் யுஜிசி தகுதியைப் பார்த்தாலே இது தெரிந்து விடும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com