நிலையூர் கால்வாயா..குப்பைத் தொட்டியா? சுத்தம் செய்ய ரூ.5 லட்சம் செலவு; கேமரா மூலம் கண்காணிக்க வலியுறுத்தல்நமது நிருபர்

திருப்பரங்குன்றம் நிலையூர் கால்வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொதுமக்களே அதில் குப்பைகளைக் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர். இதனால் பொதுப்பணித்துறையுடன் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கால்வாயை பாதுகாக


திருப்பரங்குன்றம் நிலையூர் கால்வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொதுமக்களே அதில் குப்பைகளைக் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர். இதனால் பொதுப்பணித்துறையுடன் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கால்வாயை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தொடங்கி  விருதுநகர் மாவட்டம் கம்பிக்குடி வரை நிலையூர் கால்வாய் செல்கிறது. வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது நிலையூர் கால்வாய் மூலம்  விளாச்சேரி, பானாங்குளம், நிலையூர் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு செல்கிறது.   
இக்கால்வாயானது  விளாச்சேரி, பாலசுப்பிரமணியன் நகர்,  தேவிநகர், சந்திராபாளையம், ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி. நகர்  வழியாக பானாங்குளம்  செல்கிறது.  இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். விளாச்சேரியில் தொடங்கி ஹார்விபட்டி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு  இப்பகுதி பொதுமக்கள் வீட்டின் கழிவு நீர், "செப்டிக் டேங்க்' கழிவு, நெகிழிகள் உள்ளிட்ட குப்பைகள், மாட்டுத்தொழுவத்தின் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் என டன் கணக்கிலான குப்பைகளை நாள்தோறும் கால்வாயில் கொட்டுகின்றனர். 
மேலும் வண்டிகளில் குப்பை சேகரித்து வருவோர் மற்றும் தனியார் "செப்டிக் டேங்க்' சுத்தம் செய்யும் லாரிகளில் நிரப்பப்படும் கழிவுகளும் நிலையூர் கால்வாயில் தான் கொட்டப்படுகின்றன. இதனால் தேவிநகர், சந்திரா பாளையம், ஹார்விபட்டி என நிலையூர் கால்வாய் உள்ள அனைத்து இடங்களிலும் கடுமையான துர்நாற்றமும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரானது கண்மாயை மாசடையச் செய்வதுடன் நிலத்தடி நீரையும் பாதிக்கச்செய்யும். எனவே கால்வாயில் குப்பை,  கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.   
இதுகுறித்து சந்திராபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கூறியது: மாநகராட்சி சார்பில் தினமும் இப்பகுதிகளில் குப்பைகளை  சேகரித்து செல்கின்றனர். இருந்தும் பொதுமக்கள் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனைத்தடுக்க இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குப்பை கொட்டுவோர் மீதும், கழிவுநீரை கால்வாயில் கொட்டுபவர்கள் மீதும் அதிகளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியது: நிலையூர் கால்வாயானது முள்ளிப்பள்ளத்தில் இருந்து கம்பிக்குடிவரை செல்கிறது. ஆனால் விளாச்சேரி தொடங்கி ஹார்விபட்டி வரை உள்ள பகுதிகளில்தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை அகற்ற ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் வரைசெலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சியினர் எங்களோடு ஒத்துழைப்பு செய்து குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com