பிரதமரின் உதவித் தொகை திட்டத்துக்கு ஜமாபந்தியில் விவசாயிகள் விண்ணப்பம் அளிக்கலாம்

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகைத் திட்டத்துக்கு, தற்போது வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகைத் திட்டத்துக்கு, தற்போது 
வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகைத் திட்டம் பிப்ரவரி 24 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 
இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத் திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்யலாம். மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய விண்ணப்பம் அளித்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து அதன் அடிப்படையில் பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெறலாம். இதற்கென தற்போது நடைபெறும் ஜமாபந்தியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
ஜமாபந்தி தொடக்கம்...:  மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார் ஜமாபந்தியைத் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com