மதுரையில் தலைக்கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்கு: காவல் துணை ஆணையர் தகவல்

மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) அருண் பாலகோபாலன் கூறினார்


மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) அருண் பாலகோபாலன் கூறினார்.
 இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும், அணியாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து மதுரை மாநகர் காவல் துணைஆணையர் அருண் பாலகோபாலன் புதன்கிழமை கூறியது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுரைப்படி தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக  போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைகவசம் அணியாத 17 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 
இதன்படி கடந்த ஒரு வாரத்தில் மதுரை மாநகரில் தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டிய 4,956 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மதுரை மாநகரில் 2018-ஆம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்ததாக 1,33,850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.34 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 3,94,326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 11,074 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
நிகழ் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மே 11-ஆம் தேதி வரை 1,56,592 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தலைக்கவசம் அணியாமல் பயணித்தாக 63,132 வழக்குகள் பதிந்து, ரூ. 60.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் தலைக்கவசம் அணியாத போலீஸார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 மே 11ஆம் தேதி வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ரூ.3.05 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர் மத்தியில் தலைகவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தலைக்கவசம் குறித்து எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது அதிகரித்துள்ளது. குறிப்பாக போலீஸார் துறை ரீதியான நடவடிக்கைக்கு அஞ்சி அனைவரும் தலைகவசம் அணிந்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com