முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றம்: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சுபாஷினி  விருதுநகருக்கு பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சுபாஷினி  விருதுநகருக்கு பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கடந்த ஆறு மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட சுபாஷினி, மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். 
இந்நிலையில் அவர் விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் சுபாஷினி, விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது மதுரை மாவட்ட கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியது:  
  மதுரை மாவட்டம் பத்தாம் வகுப்பு,பிளஸ் 1  மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் பல ஆண்டுகளாக பின்தங்கியிருந்தது. ஆனால் சுபாஷினி முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்ற பின்னர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு பணியாற்றினார். 
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலையில் படிப்பு, மாலையில் தேர்வு என்ற புதிய முறையை அமல்படுத்தினார். மேலும் வட்டங்கள் வாரியாக பள்ளிகளை பிரித்து மாவட்ட கல்வி அலுவலர்களை பொறுப்பாக நியமித்து பள்ளிகளில்  அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளச்செய்தார். 
காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பள்ளிகள் பிரிக்கப்பட்டு தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 17-ஆவது இடத்தில் இருந்த மதுரை மாவட்டம் இந்தாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 
 இதே போல பிளஸ் 1 பொதுத்தேர்விலும் 15-ஆவது இடத்தில் இருந்து 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிளஸ் 2 தேர்விலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 
மேலும் ஆசிரியர்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு அதைத்தீர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்தாண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகளில் மதுரை மாவட்டத்தை முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சிறப்பாக செயல்பட்டு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை ஆறு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்வது மாவட்டத்தில் கல்வித்துறை செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும். இது பொதுத்தேர்வுகளிலும் எதிரொலிக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com