சார்பு-ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  சார்பு ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  சார்பு ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்  குமாரவேல்.  இவர் கடந்த 1996-இல் காவல் துறையில் சார்பு ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அடுத்தடுத்து சில மாதங்களிலேயே  4 காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக சூலக்கரை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக,  1.8.2000-இல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால், அவரை காவல் கண்காணிப்பாளர் சந்திக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குமாரவேல் மீது புகார் செய்யப்பட்டது. இதன்பேரில், சூலக்கரை போலீஸார் அவரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கை தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
தன்மீதான பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்து, சீருடையில் இருந்தபோது கைது செய்து காவலில் வைத்தனர். இது மனித உரிமையை மீறிய செயல். என் மீதான நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி,  மனுதாரர் இழப்பீடு கோரி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.  இந்த உத்தரவை எதிர்த்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில்  குமாரவேல்  மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதன் விவரம்:  மனுதாரர் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுவிட்டதாகப் போலீஸார் கூறியுள்ளது ஏற்புடையதாக இல்லை. சீருடையில் இருந்த மனுதாரர்,  கைது செய்யப்பட்டு அரை மணி நேரம் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.  காவல் துறையினர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். அதேநேரம்,  பாதிக்கப்பட்ட மனுதாரர் ரூ.1 கோடி இழப்பீடு கேட்பதையும் ஏற்க முடியாது. இருந்தபோதும் இந்த வழக்கின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு  ரூ.5 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com