கொல்கத்தா மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: தனியார் மருத்துவனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 18th June 2019 07:31 AM | Last Updated : 18th June 2019 07:31 AM | அ+அ அ- |

மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவக் கழகம், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபம் கொண்ட உறவினர்கள் இளநிலை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மதுரையில், அரசு மருத்துவர்கள் 2 நாள்களாக போராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 ஆவது நாளாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவச் சங்கம், மதுரை மீனாட்சி மிஷன் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதற்கும், வன்முறையை தடுப்பதற்கு கடுமையான சிறைத் தண்டனையை விதிக்கும் வகையில் தேசிய அளவிலான சட்டம் இயற்றப்பட வேண்டும். வன்முறை தாக்குதலில் இருந்து தடுக்க மருத்துவமனைகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் காரணமாக மீனாட்சி மிஷன் மருத்துவனையில் வெளிநோயாளிகள் பிரிவு, பரிசோதனையகம் உள்பட பல்வேறு சேவைகள் இயங்கவில்லை. மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.