மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மதுரை இளைஞர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
By DIN | Published On : 18th June 2019 07:11 AM | Last Updated : 18th June 2019 07:11 AM | அ+அ அ- |

பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து கணவர் போராட்டம் நடத்தினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனு அளிப்பதற்காக வந்த ஒருவர் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விரைந்து வந்து அவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சக்திகணேஷ்(40) என்பதும், ஒப்பந்ததாரர் என்பதும் தெரியவந்தது.
இவருக்கும், சிவகங்கை மாவட்டம் வெள்ளிக்குறிச்சியில் உள்ள அவரது உறவினரான தேவி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனராம். மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ சக்திகணேஷ் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.
ஆகவே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் மனு அளிக்க வந்தததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து,போலீஸார் அவரை ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர். சக்திகணேஷ் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் தனது கோரிக்கை மனுவை அளித்த பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.