வாகனச் சோதனையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் பலி: ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
By DIN | Published On : 18th June 2019 07:10 AM | Last Updated : 18th June 2019 07:10 AM | அ+அ அ- |

மதுரையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மதுரை எஸ். ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவேகானந்த குமார். இவர் சிம்மக்கல் பகுதியில் டயர் விற்பனைக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சிம்மக்கல் தைக்கால் தெரு வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் தனது கடை ஊழியர் சரவணக்குமாருடன் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், விவேகானந்த குமாரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் போலீஸார் தடியால் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த விவேகானந்தகுமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) எஸ்.சாந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் கஜப்பிரியாவுடன் சென்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர், விவேகானந்தகுமாரைத் தாக்கிய போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.
பின்னர் இதுதொடர்பாக புகார் அளிக்குமாறு ஆட்சியர் தெரிவித்தார். அப்போது, அப்பகுதியில் சனிக்கிழமை இரவுப் பணியில் இருந்த 6 போலீஸாரின் பெயரையும் தெரிவித்தால்தான் புகார் அளிக்க முடியும் என வழக்குரைஞர்கள் கூறினர். இதனால், 6 காவலர்களின் பெயர்களையும் கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்ததை வழக்குரைஞர்கள் ஏற்றுக்கொண்டனர்.
சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: விவேகானந்தகுமாரின் பிரேத பரிசோதனை திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இதில் 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். இதில் பிரேத பரிசோதனை விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவடைந்தது. ஆனால் விவேகானந்தகுமாரின் சடலத்தை குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில், விவேகானந்தகுமாருடன் சென்ற சரவணக்குமார் சார்பில் உதவி ஆணையரிடம் திங்கள்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் விவேகானந்தகுமாரை போலீஸார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், எனவே தாக்குதலில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ரத்தினவேலு, தலைமைக் காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்பாபு, கந்தசாமி, ஆயுதப்படை தலைமைக் காவலர் பிரபுசீலன், ஆயுதப்படைக் காவலர் மணிகண்டன் ஆகிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.