புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் உள்ள  முரண்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முரளி, பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், விஜயகுமார், சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்கி வரும் 30-ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை ஏறக்குறைய 483 பக்கங்களை கொண்டது. மேலும் கல்விக் கொள்கையில் வரைவு முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே உள்ளது. இதை 1 மாதத்துக்குள் படித்து கருத்து தெரிவிப்பது என்பது முடியாத காரியம். குறிப்பாக மாநில மொழிகளில் வெளியிடப்படாமல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் வெளியிட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த கல்விக் கொள்கையின் படி இந்தியாவில் தற்போதுள்ள  மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பல்கலைக் கழகம் 25 ஆயிரம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. 
 இந்தியா முழுவதும் தற்போது 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிலும் 965 தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 161 கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கி வருகின்றன. தன்னாட்சி அதிகாரம்  பெற்ற கல்லூரிகளுக்கு பாடத்திட்டங்கள் தேர்வு மட்டுமின்றி, நிதி அதிகாரம், நிர்வாக அதிகாரம்,  ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து கல்லூரிகளும் தொலைநிலைக்கல்வி மற்றும் தபால் வழிக்கல்வி முறைகளை மேற்கொள்ளலாம், பட்டங்களையும் கல்லூரிகளே வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணம் படைத்தவர்கள் கல்லூரிக்கே செல்லாமல் பட்டங்கள் பெறமுடியும் என்பதை புதிய கல்விக் கொள்கை உருவாக்கியுள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேறும் மாணவர்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் சேரமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது மருத்துவ படிப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாத நிலையை உருவாக்கியுள்ளதோ, அதேபோல கலை அறிவியல் படிப்புகளிலும் ஏழை மாணவர்கள் சேரமுடியாத நிலையை உருவாக்கியுள்ளது. கல்லூரிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. இந்தியாவில் அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு ஒட்டுமொத்த கல்வியையும் தன் பொறுப்பில் இருந்து கைவிடுகின்ற நடவடிக்கையை தான் மேற்கொண்டு வருகிறது. 
 மேலும் 21-ஆம் நூற்றாண்டுக்குரிய எந்த ஒரு நவீன கல்விமுறையும் சேர்க்கப்படவில்லை.  காம சூத்திரங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அதனை வட்டார மொழிகளில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடவேண்டும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com