"குடிநீர்ப் பிரச்னை: திமுகவின் நாடகம் மக்களிடம் எடுபடாது'
By DIN | Published On : 22nd June 2019 07:09 AM | Last Updated : 22nd June 2019 07:09 AM | அ+அ அ- |

குடிநீர்ப் பிரச்னையில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்ட நாடகம் மக்களிடம் எடுபடாது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
குடிநீர்ப் பிரச்னைக்காக திமுக நடத்தும் ஆர்ப்பாட்ட நாடகம் மக்களிடம் எடுபடாது.கேரளம் வழங்குவதாக அறிவித்த குடிநீரை வேண்டாம் என தமிழக முதல்வர் மறுத்திருக்கமாட்டார். அதை எப்படி பெறுவது என்பது குறித்து ஆய்வு செய்து பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மதுரை மாவட்டத்தில் ரூ. 22.8 கோடியில் குடிமராமத்து திட்டத்தில் 61 கண்மாய்கள் தூர்வாரப்பட்டதால், குடிநீர்ப் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற உள்ளது என்றார்.