3 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.4.46 கோடியில் விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்
By DIN | Published On : 23rd June 2019 03:43 AM | Last Updated : 23rd June 2019 03:43 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.4.46 கோடி மதிப்பில் 3,619 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார். இதில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ். சாந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. மாணிக்கம், பி. பெரியபுள்ளான், எஸ்.எஸ். சரவணன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாணவியர்-பெற்றோர் முற்றுகை: வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவின்போது, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவியர் தங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை எனக் கூறி தங்களது பெற்றோர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அவர்களை போலீஸார் தடுத்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களுடன் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விடுபட்ட அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
இதேபோல், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மடிக்கணினி கிடைக்காமல் விடுபட்ட மாணவியர், பள்ளியை முற்றுகையிட்டனர்.