அதிமுக சார்பில் மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்
By DIN | Published On : 23rd June 2019 03:44 AM | Last Updated : 23rd June 2019 03:44 AM | அ+அ அ- |

மழை வேண்டி அதிமுக சார்பில், கோயில்களில் சிறப்பு யாகம் மற்றும் வருண ஜெபம் உள்ளிட்ட பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பொற்றாமரைக் குளம் பகுதியில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜைகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்று தொடக்கி வைத்தார்.
அதிமுகவின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலர் வி.வி. ராஜன் செல்லப்பா, எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் எம்.எஸ். பாண்டியன், முன்னாள் துணை மேயர் கு. திரவியம், நிர்வாகிகள் வழக்குரைஞர் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்: புறநகர் மேற்கு மாவட்டம் குலசேகரன்கோட்டை, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 இடங்களில் வருண ஜெப பூஜைகள், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றன.
குலசேகரன்கோட்டை ஆதிமீனாட்சியம்மன் கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், உசிலம்பட்டி திருமுருகன் கோயில், திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயில்களிலும் வருண ஜெபம் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பா.நீதிபதி, பி.பெரியபுள்ளான், எஸ்.எஸ். சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.