தண்ணீர் பிரச்னை: மதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd June 2019 03:43 AM | Last Updated : 23rd June 2019 03:43 AM | அ+அ அ- |

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டிப்பதாகக் கூறி, மதுரையில் 3 இடங்களில் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், மதுரையில் மாநகர், தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில், மதுரை மாநகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், காலிக் குடங்களுடன் 100 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன். முத்துராமலிங்கம், தமிழரசி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில், கள்ளிக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டச் செயலர் மு. மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காலிக் குடங்களுடன் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில்,
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன், ஒன்றியச் செயலர் ராமமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில், வடக்கு மாவட்டச் செயலர் மூர்த்தி எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலர்கள் ரகுபதி, சிறைச்செல்வன், இளைஞரணி அமைப்பாளர் ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது, மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.