திருப்பரங்குன்றத்தில் மழை வேண்டி வருண ஜெபம்
By DIN | Published On : 23rd June 2019 03:42 AM | Last Updated : 23rd June 2019 03:42 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப் பொய்கையில், அதிமுக சார்பில் மழை வேண்டி வருண ஜெப பூஜை சனிக்கிழமை நடத்தப்பட்டது.
மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த பூஜைக்கு, வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்டச் செயலர் எம். ரமேஷ், ஒன்றியச் செயலர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றார். சரவணப் பொய்கையில் உள்ள ஆறுமுகன் சன்னிதியில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, கோயில் ஸ்தானிகப் பட்டர்களான ராஜா, சிவானந்தம், ரமேஷ் ஆகியோர் தலைமையில் வருண ஜெபம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வெள்ளிக் குடத்தில் புனிதநீர் எடுத்து வந்து சரவணப் பொய்கையில் மழை வேண்டி சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.
பின்னர், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, முல்லைப் பெரியாற்றிலிருந்து லோயர்-கேம்ப் வழியாக ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, பண்ணைபட்டியில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து 44 மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில், மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலர் எம்.ஜி. பாரி, பகுதி செயலர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, மோகன்தாஸ், அக்பர்அலி உள்பட பலர் பங்கேற்றனர்.