போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும்:ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd June 2019 03:43 AM | Last Updated : 23rd June 2019 03:43 AM | அ+அ அ- |

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அரசு திரும்பப் பெறவேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் உ.மா. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறிய நிலையில், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே, அந்த நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும்.
அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைதான் நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
அதேபோல், அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் அளிப்பது மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த அடிப்படை, அவுட்சோர்சிங் முறையில் காலியிடங்களைப் பூர்த்தி செய்வதைத் தவிர்ப்பது ஆகிய கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரக்கூடிய டாஸ்மாக் பணியாளர்களை பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், பலரது பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 17-பி குற்றச்சாட்டு வழங்கப்பட்டதை திரும்பப் பெறவேண்டும் என்றார்.
மேலும், அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும் பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மதுரையில் நடைபெற்ற சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில், மாநில அளவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலத் தலைவர் உ.மா. செல்வராஜ் பேசினார். மாவட்டத் தலைவர் ப. சுப்பையன், மாவட்டச் செயலர் ரா. ஜெயகணேஷ், பேரூராட்சிப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ரா. பிச்சைமுத்து, நிர்வாகிகள் க. அறவாழி, ஏ.இ. பாலுசாமி, பி. குமார், எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.