முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு புதிய குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம், லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடி நிதி


தேனி மாவட்டம், லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம்  மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் மூல வைகை மற்றும் கொட்டகுடி ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து  தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் மட்டுமே,  வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
ஆற்று நீர் மாயம்: முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ள போது, அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கன அடி வீதம் நீர் திறக்கப்படும். இந்த நீர், லோயர்கேம்ப் தடுப்பணையில் பகுதியில் கம்பம், கூடலூர், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் குடிநீர் திட்டங்களுக்காக மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர், லோயர்கேம்ப்பில் தொடங்கி சின்னமனூர் வரை ஆற்றுப் படுகை மற்றும் கரையோரங்களில் உறைகிணறு அமைத்தும், மோட்டார் பம்புகள் மூலமும் உறிஞ்சப்பட்டு பல கி.மீ.,தூரம் குழாய் மூலம் பண்ணை விவசாயத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், உத்தமபாளையத்தில் இருந்து குன்னூர் வரை முல்லைப்பெரியாறு வறண்டு காணப்படுகிறது.   
முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை. 
மதுரை குடிநீருக்குச் சிக்கல்: வைகை அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக நாள்தோறும் விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  தற்போது, இத் திட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி குடிநீர் திட்டமும் சேர்க்கப்பட்டு விநாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் இருந்து வடுகபட்டி-வத்தலகுண்டு பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிடும் ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிகிறது. இதனால் கோடையில் மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு வைகை அணையில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மத்திய அரசு அனுமதி: வைகை அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மதுரைக்கு வழங்கப்படும் தண்ணீர், குடிநீர் தேவைக்கு போதிய அளவு இல்லை. 
மேலும் மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளின் விரிவாக்கத்திற்கு ஏற்ப கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால்  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, லோயர்கேம்ப் தடுப்பணையிலிருந்து குழாய் மூலம் மதுரைக்கு நேரடியாக கொண்டு செல்லும் புதிய குடிநீர் திட்டத்தை ரூ.1,200 கோடி மதிப்பில் செயல்படுத்த தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
 இத் திட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், லோயர்கேம்ப் தடுப்பணையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் என்ற அளவில், குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படும். வைகை அணையில் இருந்தும் மதுரை உள்ளிட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் குடிநீர் வாரிய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் பாதிக்குமா:  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், லோயர்கேம்ப் தடுப்பணையில் தொடங்கி குன்னூர் வரை 20 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், 3 நகராட்சி குடிநீர் திட்டங்கள், 15 பேரூராட்சி குடிநீர் திட்டங்கள் மற்றும் 50 ஊராட்சி குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. லோயர்கேம்பில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டால், முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்து தேனி மாவட்டத்தில் குடிநீர் திட்டங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.மதுரை குடிநீர் திட்டத்திற்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து நேரடியாகக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதால் ஆற்றில் நீர்வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.  
முல்லைப் பெரியாற்றிலும்  தண்ணீர் திறக்கப்படும்
இதுகுறித்து தேனி பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கூறியது: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து குடிநீரை குழாய் மூலம் மதுரைக்கு நேரடியாகக் கொண்டு செல்லும் புதிய திட்டத்தை ரூ.1,200 கோடி மதிப்பில் செயல்படுத்த  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பும், தேனி மாவட்ட குடிநீர் திட்டங்களுக்கு  முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், தேனி மாவட்ட முதல் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடி பருவத்திற்கும், தந்தைப் பெரியார், பி.டி.ராஜன், 18-ம் கால்வாய் பாசனத்திற்கும் வழக்கம் போல தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com