லஞ்சம் பெற்ற தொழிலாளர் நலத் துறை பெண் சார்பு-ஆய்வாளர் கைது
By DIN | Published On : 23rd June 2019 03:41 AM | Last Updated : 23rd June 2019 03:41 AM | அ+அ அ- |

மதுரையில் லஞ்சம் பெற்ற தொழிலாளர் நலத் துறை பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொழிலாளர் நலத் துறை சார்பு-ஆய்வாளர் சரோஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மருத்துவமனையில் ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இந்த விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை காசாளர் முத்துவீரன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை முத்துவீரன் பெற்றுக்கொண்டு, ஆரப்பாளையத்தில் நின்றிருந்த தொழிலாளர் நலத்துறை சார்பு-ஆய்வாளர் சரோஜாவிடம் அளித்துள்ளார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையிலான போலீஸார், சரோஜாவை கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர், சரோஜாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.