டிராக்டர் - சரக்கு லாரி மோதல்: 2 பேர் பலி
By DIN | Published On : 25th June 2019 09:10 AM | Last Updated : 25th June 2019 09:10 AM | அ+அ அ- |

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி நான்குவழிச்சாலையில் டிராக்டர் மீது சரக்கு லாரி மோதியதில் இருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த நத்தத்துபட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பரமசிவம்(22). இவருடைய நண்பர் செளந்தர்ராஜ் மகன் மருது(20). இருவரும் டிராக்டரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை வந்து கொண்டிருந்தனர். அதேபோல சிவகாசியைச் சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து(24). இவர் லாரியில் பொரிகடலை சுமைகளை ஏற்றிக் கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் டிராக்டர் வந்து கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த லாரி, டிராக்டர்மீது மோதியது. இதில், டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பரமசிவம், மருது ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட மாரிமுத்துவை கள்ளிக்குடி தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி அவரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.