சுடச்சுட

  

  கருணை வேலைவாய்ப்பு திட்டம்: சீராய்வு செய்து அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 26th June 2019 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக சீராய்வு செய்து, அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  மதுரையைச் சேர்ந்த பரணிசக்தி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எனது தந்தை சீனிவாசன் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.  இவர் கடந்த 2001 இல் பணியின் போது இறந்தார். இதையடுத்து, அந்த வேலையை, கருணை வேலை கேட்டு அரசிடம் 2006 இல் நான் மனு அளித்திருந்தேன். ஆனால், உரிய காரணமின்றி கல்வித்துறை அதிகாரிகள் எனது மனுவை நிராகரித்துவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
  இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கருணை வேலை போன்ற சிறப்பு வேலை வாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும் போது அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட  நபர்களின் விபரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக்கூடாது. கருணை வேலை என்பதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு கருணை வேலை வாய்ப்பு திட்டத்தால் பறிபோய் விடக்கூடாது.
  அரசு ஊழியர் இறப்பால் உண்மையில் பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக சீராய்வு செய்து, கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் தமிழக தலைமை செயலர் உரிய உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் உருவாக்கி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகளை பின்பற்றாமல் மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என  நீதிபதி உத்தரவிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai