திருவிழா கொண்டாடுவதில் மோதல்: கிராமத்தினரிடம் அதிகாரிகள் அமைதி பேச்சு

திருமங்கலம் தாலுகா எஸ்.வலையபட்டி கிராமத்தினரிடம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் போலீஸார் செவ்வாய்கிழமை அமைதி பேச்சு நடத்தினர். 

திருமங்கலம் தாலுகா எஸ்.வலையபட்டி கிராமத்தினரிடம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் போலீஸார் செவ்வாய்கிழமை அமைதி பேச்சு நடத்தினர். 
 திருமங்கலம் தாலுகா எஸ்.வளையபட்டியில் கோயில் திருவிழா கொண்டாடுவது குறித்து கடந்த 9 ஆம் தேதி இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலரது வீடுகள் சேதமானது. இது தொடர்பாக போலீஸார்  78 பேர்மீது வழக்குப்பதிவு செய்து 14 பேர்களை கைது செய்தனர். தொடர்ந்து வலையபட்டியில் அமைதி நிலவ மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இந்நிலையில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் தனலெட்சுமி ஆகியோர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வலையபட்டி கிராமத்தில் இருந்து இரு பிரிவைச் சேர்ந்த 8  பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் மோதல் காரணமாக சேதமடைந்த வீடுகளை வருவாய்துறையினர் மராமத்து செய்து தருவதாகவும், சேதமடைந்த மின் மீட்டர்களை மாற்றித்தர மின்வாரியத்துறை யினருக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
மேலும் மராமத்து பணிகள் இன்று(புதன்கிழமை) தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வலையபட்டியில் விழிப்புணர்வு குழு ஏற்படுத்தி கிராமத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும். கிராமத்தில் உள்ள பள்ளிக்கு 100 சதவீதம் குழந்தைகளை அனுப்ப வேண்டும்.  மோதல் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நீதிமன்றம் மூலமாக வழக்கை நடத்திக் கொள்ள வேண்டும். தற்போது வலையபட்டியில்  அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பேச்சு நடத்தப்பட்டது.  
கூட்டத்தில் ஊரக துணை கண்காணிப்பாளர் மதியழகன், ஆதி திராவிடர் தனி வட்டாட்சியர் சுந்தர முருகன்,  மின்வாரியத்துறையினர், பள்ளி கல்விதுறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com