புதிய வரைவு கல்விக் கொள்கை ஆவணம் கிழிப்பு போராட்டம்

மதுரையில் புதிய வரைவு கல்வி கொள்கை ஆவணத்தை கிழித்து இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

மதுரையில் புதிய வரைவு கல்வி கொள்கை ஆவணத்தை கிழித்து இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு புதிய வரைவுக் கல்விக் கொள்கையை அறிவித்து வரும் 30 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக மாநிலங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய வரைவுக் கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் புதிய வரைவுக் கல்விக் கொள்கை ஆவணத்தை கிழிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக் கழகக் கல்லூரி முன்பாக செவ்வாய்க்கிழமை காலையில் கூடிய  மாணவர் சங்கத்தினர், சங்கத்தின் மாவட்டச் செயலர் வேல்தேவா தலைமையில் புதிய வரைவுக் கல்விக் கொள்கை ஆவணத்தை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக மாணவர் சங்கத்தினர் கூறும்போது, புதிய வரைவுக் கொள்கை தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. கல்வி முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கல்வி அளிக்கும் உரிமையில் இருந்து அரசு விலகுவதையே புதிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. மேலும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் அபாயமும் புதிய கல்விக்கொள்கையில் உண்டு. எனவே புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com