உசிலம்பட்டி அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 04th March 2019 07:22 AM | Last Updated : 04th March 2019 07:22 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே குடிநீர் சீராக விநியோகம் செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கல்யாணிபட்டி மற்றும் அய்யம்பட்டி கிராமங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மேல்நிலைநீர்தேக்கத்தொட்டிக்கு செல்லும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வைகை அணையிலிருந்து வரக்கூடிய ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவரை நல்ல தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒருமாதமாக அந்த தண்ணீரும் குறைந்த அளவே வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே கூட்டுகுடிநீர்த்திட்ட ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் முழுமையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.