"சோகமும், விரக்தியுமாக திமுக அணி இருக்கிறது'
By DIN | Published On : 04th March 2019 07:24 AM | Last Updated : 04th March 2019 07:24 AM | அ+அ அ- |

திமுக கூட்டணி சோகமும், விரக்தியுமாக இருக்கிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டடத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக அணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசியல் சூழ்ச்சி தெரிந்தவர். நல்ல முடிவைக் கண்டிப்பாக எடுப்பார். அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அணியாக இருக்கிறது.
திமுக கூட்டணி பூஜ்யக் கூட்டணி, அக் கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், பூஜ்யம் தான். ஏன் தேர்தலைச் சந்திக்கிறோம் என்ற வேதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முகத்தில் தெரிகிறது. அக்கட்சியும் அவர்களது கூட்டணியும் சோகமும், விரக்தியுமாக இருக்கிறது. அதேபோல, அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், போட்டியிட ஆள் இல்லாமல் தேடிக் கொண்டிருக்கிறார். அங்கீகாரம் இல்லாத கட்சி என்பதால் அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் முன் வரவில்லை என்றார்.