மக்களவைத் தேர்தல்: தயார் நிலையில் 7 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன்

மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்த  7ஆயிரத்து 97 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,469 கட்டுப்பாட்டு

மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்த  7ஆயிரத்து 97 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,469 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,  4,769 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
 தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
 மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 25 லட்சத்து 66 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் 15 லட்சத்து 20 ஆயிரத்து 728 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 
680 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை...: மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 755 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குடிநீர், கழிவறை, மின்விளக்கு, மேஜை, நாற்காலி, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 680 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
 தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியின் சட்டம் ஒழுங்கு சூழல், போட்டியிடும் வேட்பாளர்கள் நிலவரம் ஆகியவற்றைப் பொருத்து பதற்றமான வாக்குச்சாவடிகள் என்பது இறுதி செய்யப்படும்.
மின்னணு இயந்திரங்கள், அலுவலர்கள்...: மதுரை மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் மக்களவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா 2 சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடம்பெறுகின்றன. 3 மக்களவைத் தொகுதிகளிலும் இடம்பெறும் மாவட்டத்தின் 2,755 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளது.
      இதன்படி, 7ஆயிரத்து 97 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,469 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,  4,769 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.  தேர்தல் அறிவிப்பு வந்த உடன் குறிப்பிட்ட தேதிகளில் அலுவலர்களுக்கான பயிற்சி தொடங்கும்.
 திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்...: மக்களவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்துவதற்கும் தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது.
    தேர்தல் கட்டுப்பாட்டு அறை...: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தனி தொலைபேசி எண் அறிவிக்கப்படும். தற்போது 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். தேர்தலுக்கான அனைத்துவிதமான ஆய்வுக் குழுக்கள், மண்டல குழுக்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்த உடன் குழுக்கள் தங்களது பணிகளைத் தொடங்கும்.
வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லையா?
  வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட அடையாள அட்டைகள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்பட உள்ளன. 
 அந்தந்த பேரவைத் தொகுதி வாரியாக அடையாள அட்டைகள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் ஒப்புகைப் பெற்று மார்ச் 22 ஆம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும்.
  இதேபோல, திருத்தம் (படிவம் 8) மற்றும் பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8 ஏ) செய்வதற்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்து 37 வாக்காளர்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இத்தகைய வாக்காளர்கள்  தங்களது பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து  அதற்குரிய படிவத்தில் (படிவம்-001) சம்பந்தப்பட்ட  தாலுகாவின் தேர்தல் வட்டாட்சியரிடம் ஒப்பம் பெற்று இ.சேவை மையத்தில் ரூ.25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
  அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஆலோசனை நடத்தினார்.

முக்கிய பிரமுகர்கள், மூத்த குடிமக்கள் மீது கவனம் ஆட்சியர் மேலும் கூறியது:
  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. விடுபட்ட வாக்காளர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோல,  பெயர் நீக்கம்,  திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கும் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.  கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட படிவங்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  அதன் பிறகும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.  இதன்படி புதன்கிழமை வரை (மார்ச் 6) பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 34 ஆயிரத்து 281 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் என மொத்தம் 44 ஆயிரத்து 888  படிவங்கள் பெறப்பட்டுள்ளன.ஆகவே, பெயர் சேர்க்க விரும்புவோர் அதற்குரிய படிவத்தை வழங்கலாம். வாக்காளர் பட்டியலில் மதுரை மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், 100 வயதை நெருங்கும் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களது பெயர் விடுபடாமல் தவிர்க்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இளம் வாக்காளர்களை முழுமையாகச் சேர்க்கவும், இறந்தவர்கள்,  முகவரி மாறியவர்கள், இரட்டைப் பதிவுகளை அகற்றி முழுமையான வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com