சுடச்சுட

  

  மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வலியுறுத்தி மதுரையில்  ரயில் நிலையம் முன்பாக மறியல்  போராட்டத்தில் ஈடுபட்ட தேவரின அமைப்புகளைச் சேர்ந்த 200 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவரின அமைப்புகள் மதுரையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தின. இந்நிலையில், விமான நிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்ட வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தேவரின அமைப்புகள் தெரிவித்திருந்தன. 
  இதையடுத்து மதுரை ரயில் நிலையம் முன்பாக போலீஸார் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் ரயில் நிலைய வாயிலில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு அரண் அமைத்து நின்றனர். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் கூடிய தேவரின அமைப்பினர், பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், பசும்பொன் பார்வர்டு பிளாக் அமைப்பைச் சேர்ந்த திருமாறன், பாரதிய பார்வர்டு பிளாக் அமைப்பைச் சேர்ந்த முருகன் ஆகியோர் தலைமையில்  மூவேந்தர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் செல்வராஜ், ஆறுமுக நாட்டார், பி.ஆர்.சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலமாகப் புறப்பட்டு மதுரை ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது ரயில் நிலைய வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றவர்களை  தடுத்து நிறுத்தினர். 
  இதனால் போலீஸாருக்கும், தேவரின அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்துஅந்த அமைப்பினர் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில்  ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். 
  ஏற்கெனவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரயில் நிலையச் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியலால் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai